Tamil Translations of Selected Short Fiction
“The Missing Are Considered Dead” - Originally published in Copper Nickel, Fall 2019. Anthologized in Pushcart 2021 XLV.
Translated by N. Asokan
எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்து வீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்தம், “கடத்தப்பட்டவர்கள்”, “கொண்டு போகப்பட்டவர்கள்” என்றால் “கொலை செய்யப்படப் போகிறவர்கள்”. சரோஜினிக்கு எப்போதுமே தான் எதிலும் முக்கியமானவள் என்ற நினைப்பு. வழக்கம் போல எனக்குப் பக்கத்தில் நின்றபடி ஒரு சிறு புன்சிரிப்பால் ‘இவளுடைய ஊர்க்கதைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதே’ என்று சைகை செய்யும் ரஞ்சன் அன்று எனக்குப் பக்கத்தில் இல்லை. ஆனாலும் அவள் தன் கதையை எடுத்துச் சொல்வதை நான் தடுத்து நிறுத்தவில்லை. அவள் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் ரஞ்சனைப் பற்றியே யோசித்தேன். அவன் எங்கே? காலப் போக்கில் எனக்குச் சுவாசம் போலப் பழக்கப் பட்டுவிட்ட ஒரு கேள்விச் சிந்தனையின் ஆரம்பம் அதுதான். அந்தச் சுவாசிப்பு தேவையானது மட்டுமல்ல, தாங்கவும் முடியாதது.
சரோஜினி என்னைத் தேடிக் கத்திக் கொண்டு வந்த போது நான் ரஞ்சன் விட்டுப் போன சில பொருட்களை எரித்துக் கொண்டிருந்தேன். சமையலறைக்குப் பின்னாலிருந்த முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்றி சரோஜினி எதுவுமே கேட்கவில்லை. துர்நாற்றம் வீச அங்கே என்ன உருகிக் கொண்டிருந்தது என்பதில் அவள் அக்கறைப் படவில்லையாக்கும்.
“நான் அவங்களைக் கண்டன்!” அவள் அடித்துச் சொன்னாள், “அதிரடிப்படைப் பெடியங்கள் அவரைக் கொண்டு போனாங்கள்.”
இராணுவத்தினர் அவனைக் கொண்டு போக முன்னர் மூன்று முறை இங்கே வந்ததைச் சொல்லி நான் அவளைத் திருத்தவில்லை. இராணுவமும் விசேட அதிரடிப்படையும் வெவ்வேறு.
எனது இழப்பில் பங்கெடுக்க அவளுக்குள்ள ஆவலைக் கண்டதால் “உனக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டேன்.
“அடிக்கடி குடிக்க வாறவன் தான் ரஞ்சனைக் கொண்டு போனவன்,” என்றாள்.
அது உண்மை. ரஞ்சனைக் கொண்டு போக வந்த ஆமிக்காரன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனவன் தான். புலிகள் பக்கம் முந்தி இருந்த கருணாவோடு ஒரு காலத்தில் சேர்ந்திருந்த எனது கணவன் பிறகு குடிக்கவெல்லாம் ஆரம்பித்துவிட்டான். சுற்றத்தினருக்கு அவன் மேல் நல்ல விருப்பமும் நம்பிக்கையும் இருந்தன, ஆகவே அவன் புலிகளை விட்டுத் திரும்பி வந்த பிறகு அவர்கள் அவனுக்குத் தேவையானது எல்லாவற்ரையும் தாராளமாகவே கொடுத்து வந்தார்கள். இது இராணுவத்தினருக்குத் தெரியும். ஆகவே அவர்கள் அடிக்கடி ரஞ்சனுடன் பேசுவதற்காக அழையா விருந்தாளிகளாகவும் வரத் தொடங்கி விட்டார்கள். ரஞ்சனுக்கு சிஙகளம் அத்துப்படி.
சரோஜினி வளவளப்பதைக் காதில் போடாமலே கேட்டுக்கொண்டு நான் ‘கப்பேடு’க்குப் போய் ஒரு பானத்தை வார்த்துக்கொண்டேன். எனது கணவனைக் கொண்டு போனவன் திரும்ப வரக்கூடும். வந்தால் அவனுக்கு இனியும் விஸ்கியெல்லாம் கொடுத்து உபசரிக்க மாட்டேன். ரஞ்சன் மதுபானங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கின்றான் என்று எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. இப்போ அவன் போய்விட்டதால் எஞ்சி இருப்பதெல்லாம் என்னுடைய சொத்துத் தானே.
//
உண்மையாக அவன் காணாமற் போன நாளுக்கும், உத்தியோகபூர்வமாக ‘காணாமற்போய்விட்டான்’ என்று பதியப்பட்ட நாளுக்கும் இடையில் முப்பது நாள் இடைவெளி. அது ஏன் என்று கேட்டால் நான் உங்களுக்குச் சொல்லக் கூடியது இதுதான்: அவனைக் கொண்டு போனதை நான் என் கண்களாலேயே கண்டிருந்தாலும்கூட, சரோஜினி வீடுதேடி வந்து சாட்சியம் சொல்லியிருந்தாலும்கூட, அதை முழுதாக நம்புவதற்கு எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதற்குப் பிறகும் என்னால் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்ததால், காணாமற் போனதை உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்ய இன்னும் மூன்று வாரங்கள் சென்றன. எனது கணவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். திரும்பி வரவேயில்லை. சாமியறைக்குள்ளே போய்க் கடவுளுக்கு முன்னாலே நகராமல் நிற்க வேண்டும் போல இருந்தது. ஒழுங்கையில் இருந்தவர்கள் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்: எப்படி ரஞ்சனை அவர்களால் கொண்டு போக முடிந்தது? ஏன் அதை எல்லோருக்கும் சொல்ல எனக்கு அவ்வளவு காலம் பிடித்தது? வம்படிப்பவர்கள் எனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுத் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் கேட்டது. நானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சிந்தித்தேன். அதைத்தான் வம்பர்களும் எதிர்பார்த்தார்கள்.
கடைசியாக, தளர்ந்து விழுந்து விடாமல் வீட்டு வாசலுக்கு வெளியே செல்லும் அளவுக்குத் தைரியம் வந்ததும், காணாமற் போனதைப் பதிவு செய்யச் சென்றபோது நான் முதல் முதலாகச் சொன்னது துஷாரவுக்குத் தான். நானும் ரஞ்சனும் திருமணம் செய்த காலத்தில் இருந்தே பக்கத்து மூலையிலுள்ள இராணுவக் காவல் முனையில் சென்ட்ரி வேலை பார்த்து வருபவன் அவன். நான் விஷயத்தைச் சொன்னபோது அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கடுமையாக யோசித்தான், யார் செய்திருக்கலாம் என்று ஊகிப்பதற்காக ஒரு தொலைபேசிப் புத்தகத்தை மானசீகமாகத் தட்டிப் பார்ப்பது போல. ஆனால் அவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் அழுதபோதுகூட அவன் கண்டுகொள்ளாதவன் போல நடித்தபடி சீருடைச் சட்டைப் பைக்குள் வைத்திருந்த கைக்குட்டையை மட்டும் கருணையுடன் எடுத்து நீட்டினான். அதற்குப் பிறகு எனது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் மரியாதை காட்டுவது போலத் தலையைக் குனித்துக் கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு காணாமற் போன பதிவை விசாரணை செய்வதற்காக ஒரு இராணுவக் கேணலை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தான். லேசாக ஊசிப் போனமாதிரி நாறும் எனது வீட்டுக் கூடத்துக்கு அழைத்துப் போய், தேனீர் கொடுத்து, என் கதை முழுவதையும் சொன்னேன். கேணல் மும்முரமாக விவரங்களை எழுதிக்கொள்ள துஷார அவருக்குப் பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். கிரிஷான் அப்போ ஒரு குழந்தை. எனக்குப் பின்னால் அழுதபடி நின்று கொண்டிருந்தான். அவனது விசும்பல்களைக் கேட்ட கேணல் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டார். பக்கத்திலே ரஞ்சன் நிற்பது போல, வெவ்வேறு மனிதர்கள் தன்னைத் தூக்கி வைத்திருப்பதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாதவன் போல, கிரிஷான் உடனேயே மௌனமாகிவிட்டான்.
நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி, தான் கேட்க வேண்டியவை எல்லாம் கேட்டு முடித்த பிறகு கேணல் எனக்கு விதிமுறைகளை விளக்கத் தொடங்கினார். எனது கணவனைக் கைது செய்ததாக எந்த விதத் தகவலும் அவர்களிடம் இல்லையாம். ஆகவே, அவன் காணாமல் மட்டும்தான் போயிருக்கிறானாம். எந்த நேரமும் திரும்பி வரலாமாம். அவனை இழந்ததற்கு எனக்கு ஏதாவது நட்ட ஈடு தருவதானால் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு தான் சாத்தியமாம். நான் பேயறைந்த மாதிரி நின்றிருந்தேன். கிரிஷான் இன்னும் சின்னவன். நான் பிரசவத்துக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வேலைக்குப் போனது கிடையாது. கையிலே காசு எதுவுமே கிடையாது. “என்ன செய்யப் போகிறாய்?” என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமான அக்கறையுடன் கேணல் கேட்டார். அப்போதுதான் “சேர், பள்ளிக்கூடத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்,” என்று துஷார சொன்னான்.
இப்படித்தான் நான் முந்திப் படித்த பள்ளிக்கூடத்திலேயே துப்புரவு வேலை செய்ய ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைகளுக்கும் தேவையான தகைமைகள் என்னிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்லும் பாதை எனக்கு நன்றாகவே பிடித்தது. நடந்து போகிற வழியில், எங்களிடமிருந்து பறித்த காணிநிலங்களில் இப்போ இராணுவத்தினர் கட்டியெழுப்பும் அழகான உல்லாசப்போக்கிடம் தெரிந்தது. அப்பாவின் பழைய வீடும் பாட்டி குளித்த கிணற்றடியும் தெரிந்தன. கிணறு முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. எல்லையில் போட்டிருந்த முள்ளுக் கம்பி வேலி வரைக்கும் போனால் உடைந்து போன கிணற்றின் சீமெந்து வட்ட விளிம்பு தெரியும். நான் கிரிஷானைத் தூக்கிக் கொண்டு போகிற போதெல்லாம் துஷார எனக்குக் கை காட்டுவான். பிறகு கிரிஷான் வளர்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரத் தொடங்கியபோது, ஆமிக்காரர்கள் தகப்பனில்லாத அவனைப் பார்த்துச் சிரித்தபடி “ஹலோ சின்னவன்” என்று அழைப்பார்கள். அவர்களின் கண்களில் இலகுவாக வரும் கனிவு என் கணவனின் ஞாபகமூட்ட, எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். அவர்களின் தாய்களைப் பற்றி நினைவு எனக்கு வந்ததும், கிரிஷானை இறுக்கிக் கட்டிப் பிடிப்பேன்.
என்னைப் போல ஒரு கணவனில்லாத பெண்ணுக்கு, கையில் பணமில்லாத ஒரு தாய்க்கு, மூன்று வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். சீமெந்துத் தரைகளை வட்டவட்டமாக ஈரத்துணியால் துடைத்தேன். கரும்பலகைகளைக் கழுவினேன். மாணவர்கள் சிந்தி விட்டுப்போன புத்தகங்களை மீண்டும் புத்தகத்தட்டுகளில் அடுக்கினேன். அவர்கள் பகலுணவு சாப்பிட்ட மேசைகளைத் துடைத்தேன். நான் அங்கே படித்த கால ஞாபகங்கள் வந்து போயின. மாணவர்கள் என்னைக் கருணையோடு நடத்தினார்கள். ஆசிரியர்கள் என்னைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. அதுவும் ஒரு கருணைதான். அங்கு துப்புரவு வேலை செய்வது எனக்குப் பெரிய அவமானம் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கலாம். நான் படித்த காலங்களில் கணிதத்தில் வகுப்பிலேயே நான்தான்கெட்டிக்காரி. ஆங்கிலத்தில் அதைவிடக் கெட்டிக்காரி. எனது ஆங்கிலத் திறமையைப் பார்த்து விட்டு நான் வெளிநாடு போவேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், மத்தியகிழக்கு நாடொன்றுக்கு, அல்லது ஐரோப்பிய நாடொன்றுக்குக் கூடப் போகும் வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் தும்புக்கட்டையோடு மண்டபத்தில் பின்னால் நின்று கொண்டு பார்ப்பேன். எல்லோரும் என்னைக் கண்டுகொள்ளாத மாதிரியே நடந்து கொள்வார்கள். ஆகவே எனக்கும் தங்கு தடையின்றி எல்லோரையும் போல நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது போன்ற உணர்வு வரும். நான் ஒரு முழுமையான மனைவியாகவும் இல்லை, முழுமையான விதவையாகவும் இல்லை, ஒரு புலியாகக் கூட ஒருபோதும் இருந்ததில்லை. ரஞ்சன் எனக்குப் பக்கத்தில் நிற்கின்றான் என்று கற்பனை செய்து கொள்வேன். அவனது அகலமும் ஆழமும், அவன் உடம்பு எடுத்திருக்கக் கூடிய இடமும் என் கற்பனையில் துளிர்ப்பன. தாறுமாறாக வளர்ந்த அவனது மீசை, அவனது புன்னகை, எல்லாம் நினைவில் வந்து போயின. “உன்னுடைய மகனும் இங்கே ஒரு நாள் படிப்பான்,” என்று யாரோ பெருந்தன்மையாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னதற்கு நான் நன்றியுணர்வு காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் வெறுப்பைப் பொங்க வைத்தது.
//
அந்த முதல் வருடம் வாரத்துக்கு ஒரு முறை துஷாரவையும் கேணலையும் பார்க்கப்போய் ரஞ்சனைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று விசாரிப்பேன். கண்ணியமாகவே ஆரம்பிப்பேன்: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுந்தானே, என்று கெஞ்சினேன்; என்னை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள், என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்தவர்கள். எனக்கு அவன் திரும்பிக் கிடைப்பது மட்டும் தான் தேவை. ஆமிக்காரர் தான் அவனைக் கடத்திக் கொண்டு போனார்கள் என்றால் நான் யாருக்குமே சொல்ல மாட்டேன், சொல்லத் தேவையுமில்லை. அவன் இப்போது புலிகளோடு இல்லை. வெறுமனே கிரிஷானின் அப்பா மட்டும்தான். தயவு செய்து அவன் எங்கே என்று சொல்ல மாட்டீர்களா? கேணல் ஒரு கூடாத மனிதரல்ல. துஷாரவை விடத் தொலைவிலிருக்கும் கிராமத்திலிருந்து வந்தவர். என்னை மௌனமாக வெறித்துப் பார்ப்பார். இரண்டாவது வருடம், எனக்கு குறைச் சம்பளத்தில் நிறைய வேலை இருந்தபோது மாதமொருமுறை மட்டும் தான் போனேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது ரஞ்சன் பக்கத்திலேயே படுத்திருப்பதாக ஒரு பிராந்தி. எப்போவாவது ஒரு நாள் சரோஜினி தெருவைக் கடந்து வந்து அவன் எங்கே சிறை வைக்கப் பட்டிருக்கிறான் என்று தான் கேட்ட வதந்தியைப் பகிர்ந்து கொள்வாள். உன்ரை மனிசன்.அந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே நேரத்தைப் பார்க்காமல் அவள் சொல்லும் கதை கேட்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவளும் வருவதை நிறுத்திக் கொண்டாள். எனது தனிமை அவளைச் சங்கடப் படுத்தியிருக்கலாம். எனது கணவன் இருந்தபோது அடிக்கடி வந்து போன அயலவர்களும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. தெருவில் காணும் போது கண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். கடைசியில் மூன்றாம் வருடத்தில் கேணலுடனான உரையாடல்கள் சம்பிரதாயபூர்வமாயின. ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்பேன். பல அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதங்களின் பிரதிகளைக் காட்டுவேன். அவர் மறதியோடு தலையாட்டும் போது ஒரு நாளுமே நற்செய்தி வரப்போவதில்லை என்ற உண்மை எனக்கு உறைக்கும். என்னைப் பார்த்துச் சிரித்த, சிரிக்கக் கூடிய, மனிதர்கள் துஷாரவும் அவனது நண்பர்களும் தான். முள்ளுக்கம்பியின் பின்னால் எங்கள் வீடுகள் இருந்த காணியில் ஒரு வளரும் குழந்தை போல அந்த ஆமி ஹோட்டல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு சீமெந்து வார்க்கும் ஆமிக்காரர்களின் முகங்கள் வியர்வையால் மின்னுவன.
//
ஒவ்வொரு மாதமும் ஏழாந்திகதி கலண்டரைப் பார்த்தபடி என் காலம் போனது. நான் ஒரு ஏழை என்று முதலே சொல்லியிருக்கிறேன் தானே. முதல் வருடம் முடியும் போது கிரிஷானிடம் காலணி இல்லாமல் போனது; இரண்டாம் வருடம் முடியும்போது.அவனது உடைகள் அளவில்லாமற் போயின. மூன்றாம் வருடத்தின் இறுதி நாட்களில் அவனை அசப்பில் பார்த்தால் ரஞ்சன் தன் வாழ்க்கையின் அதல பாதாள கட்டத்தில் இருந்தத்தைப் போலவே இருந்தான். புலிகளுடன் இருந்த காலம் ரஞனைப் பொறுமை போன, உடல்தேய்ந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. கிரிஷான் இன்னும் என் செல்லக் குட்டிதான், ரஞ்சனைப் போலவே முகம் கொண்ட அமைதியான குட்டி. ஆனால் அவனுக்கு நான்கு வயது என்றாலும், நாள் போகப்போக அவன் வளராமல் தேய்கிற மாதிரி இருந்தது.
அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு ஒரு புதுத் தலைமையாசிரியர் வந்தார். என்னைப் பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் பின்னுக்கு நின்று வேலை செய்யச் சொன்னார். அவர் இராணுவத்தினரின் நண்பர். நான் எப்படிப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்ற கதை அவருக்குத் தெரியும். நான் சொல்வது புரிகிறது தானே—அவரது சொந்தப் பொருள்களைத் துப்பரவாக்கவும் பராமரிக்கவும் அவருக்குத் தேவையிருந்தது. தையல் வேலை, திருத்த வேலை, கோப்புகளைக் கோவைப் படுத்தும் வேலை—வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய உடன்பட மாட்டார்கள். அவருக்குத் தேவையாயிருந்தது ஒரு சுறுசுறுப்பான, கெட்டித்தனமான, காசில்லாத, ஆகவே யாரிடமும் ஏதும் சொல்லி முறையிடமாட்டாத பெண்தான். பகல் வேலைகளில் கிரிஷான் கன்னியர் மடப் பாலர் பள்ளிக்குச் செல்வான். மாலை நேரங்களில் அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்ததால் பிள்ளைகளைப் பராமரிக்க மாட்டார்கள். மாலை நேரங்களில் என் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள எனக்கு யாருமே உதவிக்கு இருக்கவில்லை. அதற்கு, என்வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது, சுகம் விசாரிக்க வரும் இராணுவத்தினர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நான் கிரிஷானை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு மாலை வேலைக்குப் போகலாமா? அவன் அமைதியான பிள்ளை. தலைமையாசிரியர் சம்மதிப்பார் தானே. கிரிஷான் தொடர்ந்து வரமுடியாத ஏதாவது இடத்துக்கு நான் போகவேண்டுமென்றால் என் பிள்ளை பொறுமையாகக் காத்திருப்பான். அதற்கு அவன் இப்போ நன்றாகப் பழகிவிட்டான்.
கிரிஷானைக் கூட்டிக் கொண்டே வேலைக்குப் போவது என்று நான் தீர்மானித்துவிட்டபோது துஷார வழமை போல ஒரு கோப்பை தேனீர் கேட்டு வந்தான். அப்படி அவன் வரும்போது எனக்கு மறுப்புச் சொல்ல முடிவதில்லை. அவனுக்கும் வயசு வந்துவிட்டது. அவனது கழுத்து ஒரு வளர்ந்த மனிதனின் கழுத்தாகப் பரந்திருந்தது. படையினர் செய்யும் கடினமான கட்டட வேலைகளால் அவனது கைகளும் தோள்களும் செழிப்பாகத் திடர்ந்து முறுகியிருந்தன. என்னிடம் கடைசியாக மிஞ்சியிருந்த பிஸ்கட்களை அவனுக்குக் கொடுத்து, நான் வேலைக்குப் போக வேண்டுமென்று சொன்னேன். அவன் கிரிஷானைப் பார்த்தபடி, “உன் மகனை ஒருமுறை பாத்துட்டுப் போகலாம் எண்டுதான் வந்தன்,” என்றான். “நீ திரும்ப வேலைக்குப் போறியா?” என்று குழம்பிய முகத்தோடு கேட்டான். “இப்போ பின்னேரமல்லவா? நான் அவனைப் பாத்துக் கொள்றன்,” என்றான்.
இராணுவத்தில் இருந்தாலும் இன்னமும் ஒரு சிறு பையனாகவே இருந்த துஷாரவை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு என் பையனைப் பார்த்தேன்—அவன் ரஞ்சனைப் போல ஒரு புலியாக ஒருநாளும் வரப்போவதில்லை. இந்த உண்மைகள் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் சந்தித்திருந்த மற்ற சில இராணுவத்தினரைப் போல அல்லாமல் துஷார தான் எனது நண்பன் என்றே தன்னை வரித்துக் கொண்டான். துஷாரவோடு கிரிஷானை விட்டுவிட்டு தனது அலுவலகத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்த தலைமையாசிரியரிடம் வேலைக்கு நடந்து போனேன்.
//
எனது நேரம்—ரஞ்சனின் நேரம்—முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பள்ளிக்கூடத்துக்கு வருகை தந்தார். அந்த விசேட நிகழ்வுக்காகப் பள்ளிக்கூடத்தைத் துப்புரவாக்க இன்னும் சிலரைத் தற்காலிக வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகள் தேசிய கீதம் பாடுவதற்குப் பயிற்சி செய்தார்கள். எனக்குப் புதுச்சீருடை வழங்கப்பட்டது. வழக்கம் போல மண்டபத்தின் பின்பக்கத்தில் என்னை நிற்க விட்டார்கள். நான் இந்த வருகையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் துஷாரவுக்கும், மட்டக்களப்பில் இருந்த மற்ற இராணுவத்தினருக்கும், இந்த மனிதரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிகுந்த உற்சாகம் இருந்தது என்று எனக்குத் தெரியும். அவரது முகம் ஒரு புதிய முகம், ஆனால் அதே நேரத்தில் பழைய முகமும் தான்—பல முந்தைய அரசுகளில் பங்கெடுத்திருக்கிறார். இப்படியான பெருந்தகைகள் விஜயம் செய்யும் போது வழக்கமாக நடப்பது போலவே இராணுவத்தினர் வந்து முன்வரிசையில் நின்று அணிவகுப்பு மரியாதை செய்தார்கள்.
அவர் உரையாற்றிய போது நான் ரஞ்சனைப் பற்றி நினைத்தேன். அரசியல் என்றால் அவனுக்கு உயிர். பின்சுவரோடு சாய்ந்தபடி நான் எனது தும்புக்கட்டையை இறுகப் பிடித்திருந்தேன். அவ்வளவு தூரத்திலிருந்தும் அந்த மனிதரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது ஒரு உறுதியில்லாத முகம். எனது ஊரில் எஞ்சியிருந்த கணவர்களெல்லாரும் வெளியேறியோ எடுத்துச் செல்லப்பட்டோ காணாமற் போன பல வருட யுத்த காலத்தில் அவர் அனுபவித்த நிம்மதியான வாழ்க்கையால் அவரது தாடை மறைந்து முகம் செழிப்பாக இருந்தது. அதே காலத்தில் துஷாரவுகளும் அவர்களது கேணல்களும் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறி எங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்தார்கள்.
அரசாங்கப் பிரதிநிதி சிங்களத்தில் பேசினார். இதற்கெல்லாம் கோபம் கொந்தளிக்கத் தேவையான சக்தி எனக்குள்ளே வரண்டு போய்ப் பலகாலம். சோகம் மட்டும்தான் மிச்சம். அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்க முயற்சித்தேன். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியாது. அவர் ஒரு வசனத்தைச் சொன்ன போது அரங்கிலிருந்த மக்களிடையே ஒரு சலசலப்பு. சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று நினைத்தேன். சரியாகப் புரியவில்லை. வாயைத்திறந்து “என்ன?” என்று கேட்டேன். முதலில் எனக்குள்ளே மட்டும். பிறகு பக்கத்திலிருந்த தற்காலிக வேலையாளரைப் பார்த்து. ஆனால் அவளுக்கும் சரியாகக் கேட்கவில்லை, சிங்களமும் நன்றாகத் தெரியாது. பல முக்கியஸ்தர்கள் தங்கள் முக்கியத்துவத்தைக் கேட்பவர்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காகத் தாங்கள் சொன்னவற்றை திருப்பிச் திருப்பிச் சொல்லுவார்கள் அல்லவா? இவரும் அப்படிச் சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இரண்டு பேரும் கழுத்தை வளைத்து அரசாங்கப் பெருந்தகையைப் பார்த்துக் கொண்டேயிருந்தோம்.
ஆனால் அவர் எதையும் திருப்பிச் சொல்லவில்லை.
நான் பிறகு துஷாரவைக் கேட்கலாம். மூன்று வருடங்களுக்கு முன்னென்றால் ரஞ்சனைக் கேட்டிருப்பேன். இராணுவத்தினர் எனது கணவனை அடிக்கடி சந்திக்க விரும்பியதற்கு ஒரு காரணம் மொழிபெயர்ப்பு இல்லாமலே அவர்கள் அவனைச் சங்கடப்பட வைக்க முடிந்தது.
//
அரசாங்கப் பிரதிநிதி சொன்னது என்னவென்றால், இப்போது காணாமற் போனவர்கள் எல்லாரும் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்பதே. துஷார மெல்லிய குரலில் சொன்னான். எங்களுக்கு இது தெரிந்த விஷயம் தானே என்றான். அவன் அழுகையின் விளிம்பில் நின்றதும் எனக்கு அழுகையே வராததும் அவன் எத்தகைய கருணையுள்ளம் கொண்டவன் என்பதை உங்களுக்கு விளக்கும். அவன் எனக்கு இதைச் சொன்னபோது கிரிஷானைத் தன் மடியில் முகம் பார்த்தபடி வைத்திருந்தான். இந்தமுறை தேனீருக்குப் பதிலாக விஸ்கியைக் கொடுத்திருந்தேன். தனது மன உளைச்சலை எனது மகனுக்குக் காட்டி விடக்கூடாது என்று அவனைத் திருப்பி முழங்காலில் குதிரைச் சவாரி விளையாட்டுக்குப் போல இருத்தினான்.
“அம்மா, குதிரை!” கிரிஷான் தமிழில் சொன்னன். “Horse,” என்று நான் ஆங்கிலத்தில் சொன்னேன். பிறகு துஷாரவைப் பார்த்து, “திருப்பிச் சொல்லு,” என்றேன். “அந்தச் சொல்லைச் சிங்களத்தில் திருப்பிச் சொல்லு.”
துஷாரவின் மடியில் கிரிஷான் ஒரு குட்டி துஷாரவைப் போலத் தெரிந்தான். ஓரு குட்டி ரஞ்சனைப் போல. நான் வேலை செய்யும் தலைமை ஆசிரியரின் ஒரு குட்டி வடிவம் போல. எது உண்மை என்று சொல்லும் திறமை என்னை விட்டுப் போய்விட்டது. நேரம் முன்னோக்கி எதிர்காலத்துக்குப் போக வேண்டுமா, பின்னோக்கிக் கடந்த காலத்துகுப் போக வேண்டுமா, அல்லது அப்படியே தற்காலத்தில் உறைந்து நிற்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.
//
உங்கள் கணவரைக் கொண்டு போய் மூன்று வருடங்கள் முடிந்ததும் அவர்கள் உங்களுக்கு நட்ட ஈடு செலுத்துவார்கள். உங்களுக்கு இந்தத் தொகை உரித்து என்று ஒரு சான்றிதழ் தருவார்கள். நான் ரஞ்சனுக்காகக் காத்திருந்தேன். அவன் மறைந்து போய் மூன்று வருடம் முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் போது இன்னுமொரு மனிதனை என்னிடம் கொண்டு வந்தார்கள்.
கைவிலங்குகள் அவன் கைகளைப் பிணைத்திருந்தன. அவன் முகம் வீங்கியிருந்த விதத்தைப் பார்க்க எனக்கு என்ன செய்வது என்றோ அவனோடு எப்படிப் பேசுவது என்றோ தெரியவில்லை. நான் முந்தி ரஞ்சனோடு இருந்த காலத்தில் அவன் முகத்தை என் உள்ளங்கையால் அரவணைத்த மாதிரி இந்த மனிதனின் முகத்தையும் என் உள்ளங்கையில் ஏந்தியிருந்தாலும் அவன் முகத்தில் பரவியிருந்த காயங்களுக்கூடாக அவனது எலும்புகள் எங்கே இருக்கின்றன என்று கூடச் சொல்ல முடியாது. அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த துஷார தன் கண்களை என்பக்கம் எதிர்பார்ப்புடன் திருப்பினான். கட்டப்பட்டிருந்த மனிதன் என்னைப் பார்த்து என்னவோ முணுமுணுத்தான். நான் தான் என்று அவர்களுக்குச் சொல்லு கண்ணம்மா, அவர்களுக்குச் சொல்லு குஞ்சு. ஆனால் அது எனக்குத் தெரிந்த வாயல்ல. வரண்டு வீங்கிப் போயிருந்த அவன் நாக்கால் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை. அவன் கன்னங்கள் அழுகிய பழங்கள் போல வீங்கியிருந்தன. அவனுக்குத் தண்ணீரோ தேனீரோ விஸ்கியோ கொடுக்கலாமா என நினைத்தேன். அவனோடு தமிழில் பேச எனக்கு அனுமதி தருவார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அல்லது அந்த அரசாங்கப் பிரதிநிதியிடமிருந்து நான் படித்துக் கொண்ட ஒரேயொரு சிங்கள வசனத்தை அவனுக்குச் சொல்லலாமா: காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது.
“இவன் உங்கட புருஷன் எண்டு சொல்றார்,” கேணல் எனக்கு விளக்கினார். “நீங்க ஒவொரு மாசமும் எங்ககிட்ட விசாரிக்க வருவீங்க. ஆனபடியாத்தான் இவன உங்ககிட்ட கொண்டு வந்தோம். நாங்க எல்லாம் சரியாத்தான் செய்வம் எண்டு இப்ப உங்களுக்கு தெரியுங் தானே. இவந்தான் உங்க புருஷன் எண்டா அவனைக் கூட்டிக் கொண்டு நீங்க எங்கயாவது துர இடத்துக்குக் போக வேணுங்.. பக்கத்து ஊரில கொஞ்சம் காணித்துண்டு இரிக்கு. உங்களுக்கு வேணுமெண்டா உங்க காணியக் குடுத்துட்டுப் பதிலா அதை எடுக்கலாம்.”
போகவேணும். போகலாம். இந்தச் சொற்களின் அர்த்தங்கள் மொழிக்கு மொழி மாறலாம். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்பட வேணும். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கட்டாயமாகக் கருத வேணும். இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கருதலாம். இதைத்தான் அரசாங்கப் பிரதிநிதி சொல்ல விளைந்தார். எங்களுக்கு விமோசனம் தருகிறார் என நினைத்தாரா?
–வேணும், -லாம், இந்த சொல் விகுதிகள் எல்லாவிடமும் வியாபித்து இருக்கின்றன. அவற்றின் அர்த்தங்கள் என்னவாக இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத மனிதனோடு என் வீட்டை விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை. அவனுடைய புலி அடையாள அட்டையை எரித்து உருக்கி விட்டேன் என்று ரஞ்சனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் அட்டை இப்போ வேறேதோவாக உருமாறியிருந்தது. அந்த மனிதனை எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும்போல இருந்தது. எங்கே போயிருந்தாய்? உனக்கு என்ன செய்தார்கள்? நான் இல்லை என்று சொன்னால் உனக்கு என்ன நடக்கும்? உன்னைக் காப்பாற்ற என்றாவது நான் ஆம் என்று சொல்லி உன்னுடன் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்? எனது கணவன் ஒரு நாளும் திரும்பி வர முடியாமற் போகும். எனக்குப் பின்னால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். ஆனால் இந்த முன்பின் தெரியாத மனிதனும் ஒரு மனிதன்தான். யாருக்கோ சொந்தமானவன்தான். இப்போ நான் இவனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சில வேளை யாருமே அவனை ஏற்றுக் கொள்ளாமற் போகலாம். நான் அவனை இருட்டிலும் இருண்ட இடத்துக்குத்தான் அனுப்பி வைத்ததாக இருக்கும்.
எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று எனக்குத் தெரியாது. நான் யார், என்னிடம் என்ன உள்ளது என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிஷானின் குரல் என் பின்னே கேட்டது. அவன் சின்னஞ்சிறு கை என் கையுடன் பின்னிக் கொண்டது.
“அம்மா, இது அப்பாவா?” அவன் கேட்டான்.
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்று அந்த அரசாங்கப் பிரதிநிதி சொன்னார். ஆனால் அவர் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார்: அவர்கள் மேல் அன்புவைத்தவர்களால் தவிர.
“அப்பாவா?” கிரிஷான்மீண்டும் கேட்டான்.
“இல்லை கண்ணா,”
“இல்லை, இல்லை,” நான் கேணலைப் பார்த்துச் சொன்னேன். கேணல் தலையாட்டினார், முதலில் மெதுவாக, பிறகு உறுதியாக. நான் திரும்பவும் சொன்னேன், “இது அவரல்ல.”
“நிச்சயமாகவா?” என்று கேட்டார்
“நிச்சயமா,” என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் என் மனத்தை எதுவும் மாற்றியிருக்காது என்றாலும், நான் செய்தது சரியா என்று எப்பொழுதுமே எனக்குத் தெரிய வராது என்பதும் எனக்குப் புரிந்திருந்தது. அந்த மனிதனின் முகத்தை அதன் பின் காண்பதற்கே எனக்குப் பயமாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் தருணத்தில் அவன் முகமில்லாத மனிதனாகவே நின்றான். அவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள்.
அவர்கள் போன பிறகு நான் திரும்ப ஒரு முறை அந்தக் கலண்டர் இருந்த இடத்துக்குச் சென்றேன். இந்தமுறை நான் ரூபாய்களைப் பற்றி நினைக்கவில்லை. எனது நெஞ்சைக் கட்டி இறுக்கியிருந்த உணர்வு எப்போதாவது ஒருநாள் விலகுமா என்பதைப் பற்றி நினைத்தேன். எத்தனை நாட்களுக்குப் பிறகு அரசாங்கம் எனக்கு விதவைப் பட்டம் அளிக்கும் என்று அந்தக் கலண்டர் கூறியது. ஆனால் என்முன்னே நீண்டு இருக்கும் என் எஞ்சிய வருடங்களை யாராலும் அளக்க முடியாது. என் நீண்ட வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன்.